Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

திங்கள், 28 அக்டோபர், 2013

பண்டைய கலையின் புகழ் மணக்கும் புங்குடுதீவு

உலக இயற்கை மனிதனுக்கு காலம் காலமாக பல பாடங்களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இயற்கையின் எந்தப் பொருளையும் பண்படுத்தப் பண்படுத்த அதன் தரம் உயரும் என்பது அதில் ஒன்றாகும். அதில் என்ன வியப்பு என்றால் மனிதனை இன்றும் இயற்கையே பண்படுத்திக் கொண்டிருக்கிறது. இயற்கையின் பண்படுத்தலின் போது மனிதன் கற்றுக் கொண்டதே மொழியாகும். மொழியைக் கற்றுக்கொண்ட போதே, மனிதன் படிப்படியாக கலைகளை வேறுபடுத்திக் கற்கவும் தொடங்கினான். பேச்சு மொழி பிறக்க முன் மனிதன் பேசிய மொழி, சைகைமொழியாகும்.  அந்த சைகைமொழியே நடிப்புக் கலைக்கு வழிவகுத்தது. உணவுக்காக, உறவுக்காக அவன் இட்ட கூக்குரல் மொழியாகவும், இசையாகவும் மாறியது. ஆதிமனிதன் ஏழுப்பிய ஓசை, இசை, அசைவு மூன்றும் சேர்ந்தே மொழியானது. அதனால் அவன் பேசிய மொழியில் சொற்கள், இசை, நடிப்பு என்ற முக்கூறுகள் பிறந்தன. 

ஆதிமனிதன் எழுப்பிய சொல், இசை, நடிப்பு ஆகிய முக்கூறுகளையும் இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் வடிவமாக, தமிழ்மொழி தன்னுள் அடக்கி வைத்திருப்பதால் ஆதிமொழி தமிழ் என்பதை உலகிற்கு மெல்லச் சொல்லாமல் சொல்கிறது. அதனை தமிழர்களகிய நாமே புரிந்து கொள்வதில்லை. எம்மொழிக்கும் இல்லா அச்சிறப்பு தமிழுக்கு உண்டு என்பதை உலகிற்கு உணரவைக்கும் கடமை தமிழராகிய எமக்கு இருக்கிறது. 

பண்டைய தமிழரின் ஆடற்கலையின் இன்றைய வடிவம் (கம்போடியா)

முத்தமிழிலும் இருந்து பல கலைகள் முகிழ்ந்தன. உதாரணமாக ஒருவர் ஆடற்கலையை முறையாகக் கற்கவேண்டுமானால் அவருக்கு மொழி, கணிதம், இசை, தாள நுணுக்கம், இசைக்கருவிகளின் தன்மை, வண்ணங்களின் பாகுபாடு, ஒலி, ஒளி வேறுபாடு, ஓவியம், சிற்ப நுணுக்கம், ஒப்பனை, ஆடை அணியும் திறமை எனப் பல கலைகள் தெரிந்திருக்க வேண்டும். இதுபோல் ஒவ்வொரு கலையையும் கற்பதற்கு வெவ்வேறு கலைகளைக் கற்கவேண்டிய தேவையிருப்பதை பண்டைய தமிழர் உணர்ந்தனர். 

அவர்கள் பெண்கள் கற்க அறுபத்து நான்கு கலைகளும், ஆண்கள் கற்க எழுபத்தி இரண்டு கலைகளும் என்று முதன்மைக் கலைகளைப் பிரித்தனர். ஆதலால் அறுபத்து நான்கு கலைகளின் தெய்வமாக, பெண்தெய்வமான கலைமகளை
“ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் 
ஏய உணர்விக்கும் என் அம்மை” 
என கம்பரும் போற்றினார். 

அவ்வாறு பிரித்து கற்பிக்கப்பட்டு வந்த கலைகள், மாற்றார் படைஎடுப்பால் சிதைத்து சீரழிக்கப்பட்டன. மாற்றார் அக்கலைகளின் ஏட்டுச்சுவடிகளை எரித்ததோடு கொள்ளை அடித்தும் சென்றனர். மீதி ஏடுகள் அந்தந்த குடும்பத்தாரின் பெட்டகங்களில் உறங்கின. கடல் கோள்களாலும், மற்றைய இயற்கை அழிவுகளாலும் அழிந்தவை போக கல்விக்காகவும், தொழிலிற்காகவும் நாடுவிட்டு நாடு சென்றோரும் தம்மோடு ஏடுகளை எடுத்துச் சென்றனர். இந்நிலை கிறிஸ்த்து பிறப்பதற்கு 1250 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது.

அன்றைய உலகை, பேரழிவுக்கு உள்ளாக்கிய மாபெரும் கடல்கோள் சொலமன் (solomon) அரசனின் காலத்திற்கு 300 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அக்கடல்கோள் நடந்த காலத்தை The Anchor Bible Dictionary கி மு 1250 என்று சொல்கிறது. அந்தப் பேரழிவு நடந்த போதே இளங்கோவடிகள் சொன்ன
“பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
குமரிக்கோடும்”
பண்டையமனித எச்சம்
கொடுங்கடல் கொண்டிருக்க வேண்டும், அல்லது சங்க இலக்கியம் சொல்வது போல் அதற்கு முன்பும் நடந்திருக்கலாம். ஏனெனில் 12,000 ஆண்டுகளுக்கு முந்தியதாக நம்பப்படும் மனிதனின் எழும்புத்தொகுதியை களுத்துறைக் குகையுள் கண்டுபிடித்திருக்கின்றனர். களுத்துறையும் பண்டைய தமிழரின் வாழ்விடமாகும்.

பண்டைய கடல் கோளில் இருந்து தப்பிய தமிழர் உலகெங்கும் சென்று வாழத்தொடங்கினர். அந்நாளில்  இன்றைய இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கு இடையே குமரியாறு ஓடியது. அந்தக் குமரி ஆற்றின் ஆற்றிடைக் குறையே இலங்கை. தமிழில் ஆற்றுக்கு இடையே அகப்பட்டு குறையாக இருக்கும் நிலமான ஆற்றிடைக்குறையை - ‘இலங்கை’ என அழைப்பர். 

ஆற்றிடைக்குறை (Delta of the Ganges River - Photo: source Wikipedia) 
பண்டைய நாளில் இலங்கை பல கலைகளின் பிறப்பிடமாக இருந்தது. இன்றும் இலங்கையின் தொல்பொருள் ஆய்வுகள் அதனை எடுத்துக் காட்டுகின்றன. அதனால் இலங்கையில் வாழ்ந்த பண்டைய தமிழரின் கலைப் பண்பாட்டுச் சுவடுகளை, நாம் உலகின் பண்டைய இனங்களின் உயர் பண்பாடுகளில் காணக்கூடியவர்களாக இருக்கிறோம். இலங்கை எனும் பெயர் நிலைத்து இருக்கும் வரை அது தமிழனின் நிலம் என்பதையும் அதில் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து இன்று உலகக்கலைகளின் பண்பாடாக பரந்து வளர்ந்திருக்கும் கலைகளும் அவை தமிழர் கலைகள் என்பதையும் சொல்லும்.

இப்படிப் புகழ்மணக்கும் வரலாற்றுப் பண்பாடுடைய இலங்கையின் மணிமுடியாக இருப்பது யாழ்ப்பாணம். அந்த மணிமுடியில் துலங்க வேண்டிய நவமணிகளில் முத்தும் பவளமும் கடலில் இருப்பதால் மற்றைய ஏழு மணிகளும் ஏழு தீவுகளாகத் இலங்குகின்றன. அந்த ஏழுமணிகளுள் நடுவே இருந்து, பண்டையநாள் தொட்டு புகழ் எனும் ஒளிவீசுவது புங்குடுதீவே. 

மாதவியிடம் கலை பயின்ற நீரா என்பவளும் அவள் கணவனும் உலகநாடுகளுக்குச் சென்று  ஆடற்கலையை அறிந்து வந்த வழியில் புங்குடுதீவின் சாக்கைகூத்தில் மயங்கி அங்கு  வாழ்ந்தனர் என்று, புங்குடுதீவில் கோட்டைகட்டி வாழ்ந்த வீரமாதேவி (பாண்டியப் பேரரசின் இளவரசி - 1310), தான் எழுதிய சுயசரிதையில் சொல்கிறாள். சாக்கைக்கூத்தை ஆடுபவர் ஆண்போலவும் பெண்போலவும் ஒப்பனை புனைந்து கொள்பவராகவும், பாடக்கூடியவராகவும், ஆடக்கூடியவராகவும் இருக்கவேண்டும். அவைமட்டும் இருந்தால் போதாது. தனது உடலின் வலப்பக்கத்தில் ஆண்மையையும் இடப்பக்கத்தில் பெண்மையையும் வெளிப்படுத்தி ஆடும் திறமையும் இருக்கவேண்டும்.  
அதனை  
“திருநிலைச் சேவடி சிலம்புவாய் புலம்பவும்
பரிதரு செங்கையில் படுபறை ஆர்ப்பவும்
செங்கண் ஆயிரம் திருக்குறிப்பு அருளவும்
செஞ்சடை சென்று திசை முகம் அலம்பவும்
பாடகம் பதையாது சூடகந் துளங்காது
மேகலை ஒலியாது மென்முலை அசையாது
வார்குழை ஆடாது மணிகுழல் அவிழாது
உமையவள் ஒருதிறனாக ஓங்கிய
இமையவன் ஆடிய கொட்டிச் சேதம்”
என இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடுகிறார். 
அர்த்த நாரீஸ்வரர் ஆக இறைவன் ஆடிய ஆட்டத்தில், உமையவளின் பாகம் எப்படி ஆடாது அசையாது இருந்ததோ அதுபோல் இருக்கவேண்டும், உமையவள் ஆடும்போது இறைவர் பாகம் ஆடக்கூடாது. இப்படி ஆடுவது எவ்வளவு கடினம்?                                               
பள்ளியகத்தின் முகப்புத் தோற்றம்  

அப்படி ஆடுவதில் திறமை வாய்ந்தவர்கள் புங்குடுதீவில் வாழ்ந்தார்கள். அவர்களில் சிலரை வீரமாதேவியின் கணவன் நரசிம்மன் கம்பூசியாவிற்கு அழைத்துச் சென்று, கபிலபுரத்தில் அவர்களை இருக்கவைத்தான் என்பதையும் அவனது தந்தை காங்கேயன் போலவே மலைபோன்ற கலைமண்டபம் அமைத்தான் என்பதையும் அவள் வரலாறு சொல்கிறது. 

எழுநூறுவருடங்களாகியும் தன் கதைகூறும் பள்ளியகம்

அவைமட்டும் அல்லாமல் கம்பூசியாவில் ‘பள்ளியகம்’ என்னும் ஒரு கோயிலையும் கட்டினான் என்பதையும் சொல்கிறது. எழுநூறு வருடங்களுக்கு முன் கம்பூசியாவில் நரசிம்மன் கட்டிய   ‘பள்ளியகம்’ இடிபாடுகளுடன் இன்றும் அங்கு இருக்கிறது. இதனால் பண்டைய கலையின் புகழ்மணக்கும் இடமாக புங்குடுதீவு இருந்ததன் உண்மையை மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மகள் வீரமாதேவி வரலாறுற்றுடன் இப்பள்ளியகமும் எமக்கு எடுத்துச் சொல்கிறது.
 

சிரட்டை நடனம்

பண்டைய தமிழரின் கலையான சாக்கைகூத்தை புங்குடுதீவினராகிய நாம் மறந்தாலும் கம்போடியர்கள் பண்டைத் தமிழரின் ஆடற்கலையை, புராணக் கதைகளை, ஆடற்கலை மூலம் புராணக்கதை சொல்லும் பாங்கை, நம்  கிராமிய நடங்களான உழவர் நடனத்தை (நெல்லுவிதைத்தல், நாற்றுநடல், களைபிடுங்குதல், அரிவுவெட்டல், சூடுமிதித்தல், நெல்லு தூற்றுதல்), சிரட்டை நடனத்தை, கோலாட்டத்தை, கும்மியை மறக்கவில்லை. இன்றும் அவர்கள் பண்டைத்தமிழ்க் கலையான  ஆடற்கலையை அக்கலையின் பண்புகளுடன் பேணுகின்றனர்.


அங்கே  இப்போது அந்த சாக்கையர்களின் சந்ததியினர் கம்போடியர்களாக தமது பண்டைய உறவை மறந்து வாழ்கின்றனர். இப்படி தமிழரின் கலைப்பண்பாடு காலம் காலமாக உலகெங்கும் சுற்றிச் சுழல்கிறது என்பதற்கு புங்குடுதீவும் கம்போடியர்களின் ஆடற்கலையும் சாட்சி பகர்கின்றன.

இனிதே,
தமிழரசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக