பண்டைய கலையின் புகழ் மணக்கும் புங்குடுதீவு
உலக இயற்கை மனிதனுக்கு காலம் காலமாக பல பாடங்களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இயற்கையின் எந்தப் பொருளையும் பண்படுத்தப் பண்படுத்த அதன் தரம் உயரும் என்பது அதில் ஒன்றாகும். அதில் என்ன வியப்பு என்றால் மனிதனை இன்றும் இயற்கையே பண்படுத்திக் கொண்டிருக்கிறது. இயற்கையின் பண்படுத்தலின் போது மனிதன் கற்றுக் கொண்டதே மொழியாகும். மொழியைக் கற்றுக்கொண்ட போதே, மனிதன் படிப்படியாக கலைகளை வேறுபடுத்திக் கற்கவும் தொடங்கினான். பேச்சு மொழி பிறக்க முன் மனிதன் பேசிய மொழி, சைகைமொழியாகும். அந்த சைகைமொழியே நடிப்புக் கலைக்கு வழிவகுத்தது. உணவுக்காக, உறவுக்காக அவன் இட்ட கூக்குரல் மொழியாகவும், இசையாகவும் மாறியது. ஆதிமனிதன் ஏழுப்பிய ஓசை, இசை, அசைவு மூன்றும் சேர்ந்தே மொழியானது. அதனால் அவன் பேசிய மொழியில் சொற்கள், இசை, நடிப்பு என்ற முக்கூறுகள் பிறந்தன.