Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

திங்கள், 28 அக்டோபர், 2013

புயலடித்துச் சென்ற வள்ளம்/ பண்டிதர் மு ஆறுமுகன்

புயலடித்துச் சென்ற வள்ளம்

எழுதியவர் - பண்டிதர் மு ஆறுமுகன்
[தினகரன் ஞாயிறுவாரமலர், கொழும்பு; 11/02/1951]
                    
புயல் அடித்தது! பெரும் புயல். 
அது ஆயிரத்துத் தொளாயிரத்து இரண்டாம் ஆண்டு இருபதாந்தேதி அடித்தது.
நயினாதீவிலும் நல்ல புயல்.

எத்தனயோ தென்னை, பனை, வாழை இவையெல்லாம் முறிந்து பெயர்ந்து தரைமட்டமாயின. கடல் வீறிட்டுப் பெருகி அலைமோதியது. சனங்கள் வீட்டுக்கு வெளியே போகமுடியவில்லை. அப்படியே இருந்து விட்டார்கள். என்ன செய்வார்கள்? புயலுடன் பெரிய மழையும் ‘சோ’ எனப் பொழிந்தது.

அன்று இரவு புயலும் மழையும் இன்னும் மோசமான நிலையை அடைந்துவிட்டன. கடல் பெருகிக் குதித்து ஓடியது. ஆதலால் கடற்கரையில் வழக்கமாகக் கட்டிவைக்கும் வத்தைகள், வள்ளங்களைத் திரும்பவும் பெலமாகக் கட்டி வைக்கமுடியவில்லை.

இலங்கையில் முதற்தரமான குளிகாரர் நயினாதீவில் இன்றும் இருக்கிறார்கள். கீழைக்கரை ஓரக்காரர் இவர்களிடம்தான் குளியோடப்பழகியவர்கள் என்றுகூடச் சொல்வார்கள். அத்தகைய வீராதிவீரர் நயினாதீவில் உள்ள குளிகாரர். அவர்களால் கூட அந்த வள்ளங்களைப் பெலனாகக் கட்டி வைக்கக் கொந்தளித்த கடல் அன்று இடங்கொடுக்கவில்லை. இயற்கை சீறினால் அதனோடு மனிதவலிமை போராட முடியுமா? ஆகவே நடப்பதைக் கண்டு கொள்வோமெனப் பேசிக்கொண்டு அனைவரும் வீடுகளிலே இருந்தார்கள்.

“வெட்டி அடிக்குது மின்னல் - கடல்
          வீரத்திரை கொண்டு விண்ணைப் பிளக்குது
கொட்டியிடிக்குது மேகம் - கூ
          கூவென்று விண்ணைக் குடையிது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று
          தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய - மழை
          எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!”
 என்ற மகாகவி பாரதியார் பாடலை நயந்து உறுமிக்கொண்டிருந்தது அந்த இரவு. 


அதிகாலையில் சேவல்கள் கூவவில்லை. மயில்கள் அகவவும் இல்லை. ஏன்! பட்சிகள் எல்லாம் குளிரில் நடுங்கும் ஓசையொழிய வேறு வழக்கமான ஆனந்தப் பாடல்கள் எவையும் நடைபெறவில்லை. ஆதலால் அன்று காலை சோகக்காட்சியையே இயற்கை சித்திரித்துக் கொண்டிருந்தது. அந்தப் பரிதாபமான நிலையைப் பார்த்துப் புயலும் மழையும் சிறிது ஓய்ந்தன. இரவு முழுதும் எப்பொழுது விடியுமென அவாவுடன் இருந்த வள்ளக்காரர் (பழய கறுப்பன் தன்னுடைய பணத்தைப் பார்க்கப் பாராங்கல்லைப் புரட்டப் போன) ஆசையோடு ஓடிப்போனார்கள். அவர்களுக்கு முன் மனங்கள் துடித்துக் கொண்டு போயின. அதிட்ட சாலிகளின் வள்ளங்கள் கட்டுப்பட்டபடியே கிடந்தன.

ஆனால் தெற்கு நயினாதீவில் ‘நீலாத்தை’யுடைய வள்ளத்தைக் காணவில்லை. கட்டி இருந்த கயிறு அறுந்து கிடந்தது. நயினாதீவுக் கரையெல்லாம் ஓடியோடித் தேடினார்கள் காணவில்லை. கண்ணுக்கு எட்டு மட்டும் பார்த்தார்கள் காணப்படவேயில்லை. இவர்களுடைய வள்ளம் ‘முத்துக்கொம்பன்’ - “அது அறுத்துக் கொண்டு போய்விட்டது.” என்ற வதந்தி அவசர தந்தி போல் நீலாத்தை வீட்டிலுள்ளாருக்கும் எட்டியது. அவர்களும் கடற்கரைக்கு ஓடிப்போனார்கள். செகிடாத்தை கதிர்காமர் அவர்களுள் முக்கியமானவர். முத்துக்கொம்பன் வந்த பின்புதான் அவர்கள் குடும்பத்துக்கு ஊரவர்கள் பெரிதும் கடமைப்பட்டார்கள். கட்டப்பட்ட முத்துக்கொம்பன் கயிற்றை அறுத்துக் கொண்டு போய்விட்டது. அது இல்லாமல் அவர்கள் குடும்பம் இனி எப்படி வாழ்வது? என்ற கவலை நீலாத்தையை ஒரு உலுப்பு உலுப்பியது. கடற்கரையில் விழுந்து கதறினார். குடும்பத் தலைவன் நிலைதளர்ந்து போனால் மனைவி மக்கள் என்ன செய்வார்கள்? அவர்களும் விழுந்து கட்டி அழுதார்கள். அவர்களைச் சுற்றி ஒரு சனக்கூட்டம் அனுதாபத்துடன் கூடிவிட்டது.

அந்த நாளில் ஒரு செட்டியாரின் தாபனத்தில் நயினை நாகமணிப்புலவர் கணக்குப்பிள்ளையாக இருந்தார். அவரும் கடற்கரைக்குப் போனார். அவருடைய நண்பர் செல்லப்பரும் அங்கே போயிருந்தார். ஓர் இடத்தில் சனக்கூட்டம். அதிலிருந்து கூக்குரல் கேட்டது. புலவரும் செல்லப்பரும் விரைந்து போனார்கள். முத்துக்கொம்பனைக் காணவில்லை. அதனால் அதன் சொந்தக்காரர் கதறுவதாக அறிந்தார்கள். அவர்களின் புலம்பலைப் பார்க்க இவர்களுக்கும் மனங்கசிந்தது. செல்லப்பர் தாராளமான பெரிய மனுசன். கொஞ்சம் நகைச்சுவையும் உடையவர். தனது நண்பரைப் பார்த்து “புலவரே! இந்தச் சோகக்காட்சியை ஒரு பாடலாக்கலாமே” என்றார்.  அப்போது பாடப்பட்டது பின்வரும் பாடல்.

“சீர்கொண்ட கலியுகத் தொன்பான நூற்றாண்டில்
          செகிடி கதிர்காம புதல்வன்
சென்ற நீலாத்தை மன்னார்ப் பகுதியால் நயினை
          சேர்த்திட்ட சிதவல் அலவன்
ஊர்கொண்ட அவர்கள் குடிஉய்யவே தினமும்மீன்
          உயிர் கொண்ட கங்காளமும்
ஒரு மாதமளவில் எட்டுத்தரம் பழுது பார்த்து
          உற்ற வைரப் பொக்கிஷம்
கூர்கொண்ட ஆணியால் இடையெங்கும் இன்றியே
          குழி கொண்ட கங்காளமும்
குடி சனத்தைத் திமிலரடி தேடவிடும் முத்துக்
          கொம்பனெனும் நாமதேயன்
சூர்கொண்ட கதிர்காமரோடு மனைமக்களும்
          சூழ்ந்து கட்டிப் புலம்பச்
சுபகிருது வருஷம் ஐப்பசி மாசம் இருபதில்
          சொந்த ஊர் மருவினாரே”

நீலாத்தை ஆயிரத்துத் தொளாயிரமாம் ஆண்டு மன்னாருக்குப் போயிருந்தார். முத்துக்கொம்பனை மன்னாரிலே கண்டுவிட்டார். பேய்பிடித்தது போல முத்துக்கொம்பனை அவருக்குப் பிடித்துவிட்டது. நெடுங்காலம் மன்னாரில் தொழில் செய்து திரிந்தபடியால் முத்துக்கொம்பன் என்ற பெயர் அப்படியே இருக்க, வள்ளம் மெருக்காய் (சிதவல்) நண்டு போல கோதாகி இருந்தது. அப்படி இருந்தாலும் அதனை மன்னாரில் இருந்து நயினாதீவுக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டார். 

ஒவ்வொரு நாளும் அது தொழிலுக்குப் போய் மீன் வேட்டையாடி அவர்களின் குடியை உய்வித்துக் கொண்டு வந்திருக்கிறது. ஆக ஒரு மாசத்தில் எட்டே எட்டு முறை தான் கரைக்கு இழுத்து ஓட்டை உடைசல் அடைத்து வைரப் பொக்கிஷமாக்கிக் கொள்ளுவார்களாம்.

ஆனால் கூரான உளி கொண்டு அடிக்கடி நெடுங்காலங் கலப்பத்துப் பார்த்து வந்திருந்தபடியால் புறப்பக்கம் மாத்திரம் (எள்ளுப்போட இடமின்றி) குழியாக கங்காளம்போல இருந்தது. இவ்வளவு சித்திரமான முத்துக்கொம்பன் திமிலரடியை ஊர்ச்சனங்கள் தேடுமளவுக்குப் பெருஞ் செல்வாக்குடன் நின்றது. அந்த முத்துக்கொம்பனை அவர்களுடைய உயிருக்குச் சமானமாக நேசித்தார்கள்.

நன்றி இல்லாத முத்துக்கொம்பன் புயலடித்த சாட்டை வைத்துக்கொண்டு வந்த ஊரில் இருந்து மறைந்துவிட்டது. கதிர்காமர் பெரிய வீராதிவீரர்தான், என்றாலும் அவர் அதனிடத்தில் வைத்திருந்த மதிப்பும், அதனோடு பட்ட சிரமமும், அதனால் கிடைத்த புகழும் அவரையும் அவரது குடும்பத்தையும் நிலை தளர்த்து கட்டிஅழ வழி செய்தது. மறைந்து போகிறவர்களுக்கு தொல்லை தீர்ந்ததே என்ற நிம்மதி. அப்புறம் தம்மால் இன்பம் அநுபவித்தவர்களை திரும்பிப்பார்க்கும் நிலைமை உலக வழக்கில் இல்லைத் தானே. 

போனவர் போய்விட்டாலும் அவரைத் தொட்டு அநுபவித்தவர்கள் இன்னும் கொஞ்ச நாள் அநுபவிக்க இருந்தாரில்லையே என்று துயரப்பட்டுக்கொண்டு இருப்ப, “சுபகிருது வருஷம், ஐப்பசி  மாசம் இருபதில் சொந்த ஊர் மறுவினாரே” என்றல்லவா! பாடுகிறார். ஆம், பிறந்த இடத்துக்கு - மன்னாருக்கு - வாங்கிய இடத்துக்கே போய்விட்டது. கட்டி வைத்த கட்டு அறுந்தால் வாங்கிய இடத்துக்குப் போகுந்தானே. அதனைப் புலமைக்கண் கண்டு நமக்குக் காட்டுகிறது. 

குறிப்பு:
எனது தந்தையாரால் எழுதப்பட்ட ‘புயலடித்துச் சென்ற வள்ளம்” என்ற இக்கட்டுரையில் எடுத்துச் சொல்லப்படும் நயினை நாகமணிப்புலவரின் பாடல் புயலடித்துச் சென்ற வள்ளத்தை மட்டும் சொல்லவில்லை. சுபகிருது வருடம், ஐப்பசி மாதம் இருபதாந் திகதி [20-10-1902]அன்று தீவுப்பகுதி எங்கும் வீசிய பெரும் புயல் பற்றிய ஒரு வரலாற்றுப் பதிவையும் சொல்கிறது என்பதை என் தந்தையின் இக்கட்டுரை எடுத்துக் காட்டுகிறது.
இனிதே, 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக